திருவள்ளூர் ரெயில் விபத்து; 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன்

2 hours ago 2

சென்னை,

மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், கவரப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி, கவரப்பேட்டை சிக்னல் ஆப்பரேட்டர்கள் உள்பட 13 பிரிவு அதிகாரிகளுக்கு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.

இவர்கள் இன்று மாலை தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article