திருவள்ளூர் – சென்னை சென்ட்ரல் இடையே குளிர்சாதன மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: பயணிகள் வேண்டுகோள்

2 weeks ago 4

திருவள்ளூர், ஏப்.25: திருவள்ளூர் – சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு இடையே குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்களை இயக்க வேண்டும், என்று ரயில் பயணிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக பொது போக்குவரத்தான ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும். கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம், சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்கும், பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, கோடை வெயில் தொடங்கிய நிலையில், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. வரும் மே மாதத்தில் அக்னி வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வீடுகளில் 24 மணிநேரமும் மின்விசிறி ஓடினாலும் புழுக்கம் குறையாததால், மக்கள் பலரும் ஏசி, ஏர் கூலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன வசதிகொண்ட அதிநவீன சொகுசு பேருந்துகளை பயணிகள் வசதிக்கென இயக்கி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் சென்னைக்கு மிக அருகாமையில் திருவள்ளூர் மாவட்டம் அமைந்துள்ளது. இதில் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை ரயில் நிலையங்களுக்கு நாள்தோறும் 75க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புறநகர் ரயில்கள் மூலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து செல்கின்றனர்.

ஆரம்பத்தில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் பயணிகள் வருகை அதிகரித்ததையடுத்து 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில்களை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, தற்போது, காலை மற்றும் மாலை நேரங்களில் 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆனாலும், பயணிகள் கூட்டம் பலமடங்கு உயர்ந்துள்ளதால் அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்கள் வழியாக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் வரை அனைத்து ரயில்களிலும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. வியர்வையில் குளித்தபடி பயணிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனிடையே, கடந்த 19ம் தேதி சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்பட்ட குளிர்சாதன வசதிகொண்ட மின்சார ரயில்களுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து குளிர்ச்சியான சூழலில் ரயிலில் செல்ல பெரும்பாலான பயணிகள் விரும்பி பயனிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் குளிர்சாதன ரயில் இயக்கப்படுவதுபோல, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் இயக்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும், என்று பயணிகள் எதிர்ப்பார்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் ரயில் நிலைய பயணிகள் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆவடி, அம்பத்தூர், பட்டரைவாக்கம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு புறநகர் மின்சார ரயிலில் செல்ல சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடம் ஆகிறது. கோடை காலம் என்றாலே திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக வெயில் வாட்டி வதைக்கும். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் விதமாக திருவள்ளூர் – சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் இடையே குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்களை இயக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுக்கின்றனர்.

சென்னை சென்ட்ரல் – திருத்தணி வரை ஏசி ரயில் இயக்க வேண்டும்
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே கடந்த 19ம் தேதி ஏ.சி வசதிகொண்ட மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பெரிதளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, திருவள்ளூர் – சென்னை சென்ட்ரல், அரக்கோணம் – சென்னை கடற்கரை, சென்னை சென்ட்ரல் – திருத்தணி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். மக்களின் போக்குவரத்து சேவையின் பெரும்பங்காற்றி வரும் ரயில்வே துறை பொதுமக்களின் வசதிக்கென கூடுதல் ரயில்களை இயக்கவும், கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களை கண்டறிந்து குளிர்சாதன வசதிகொண்ட மின்சார ரயில்களை இயக்க ரயில்வே துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கைவிடுக்கின்றனர்.

The post திருவள்ளூர் – சென்னை சென்ட்ரல் இடையே குளிர்சாதன மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: பயணிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article