திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. ஐடிஐ முடித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பாலாஜியும் அதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரியும் பள்ளி பருவத்திலிருந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்காது என்பதால் கடந்த மார்ச் மாதம் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்து முறைப்படி பதிவும் செய்தனர். ஆனால் வீட்டில் யாருக்கும் சொல்லாமல் அலைபாயுதே சினிமா பாணியில் இருவரும் அவரவர்கள் வீட்டில் வாழந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் புவனேஸ்வரி வீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால் தங்களை பிரித்து விடுவார்களோ என்று அச்சமடைந்த பாலாஜி, புவனேஸ்வரி ஆகியோர் நேற்று கணவன் மனைவியாக திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து எஸ்பி சீனிவாசப் பெருமாள் உத்தரவின் பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருவரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
The post திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டுகாதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.