
திருவண்ணாமலை,
கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஐ.டி துறையில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க, புதிய மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்து இருந்தார். 34 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதமே தொடங்கியது. கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியது.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க, கட்டுமான பணிகளுக்காக டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. ரூ.34 கோடி செலவில் 4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பூங்கா, ஓராண்டில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கனோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மினி டைடல் பார்க் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது அப்பகுதி இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.