
மும்பை,
தனது முதல் காதல் ஒரு கார் விபத்தில் இறந்ததாக பிரீத்தி ஜிந்தா கூறி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2003-ம் ஆண்டு ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா நடிப்பில் வெளியாகி இருந்த படம் 'கல் ஹோ நா ஹோ'. இதில், ஷாருக்கான் அமனாகவும், நைனா கேத்தரின் கபூராக பிரீத்தி ஜிந்தாவும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் இருவரது நடிப்பும் பராட்டப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீசானது. இப்படத்தை திரையில் பார்த்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி, ரசிகர் ஒருவர் இப்படத்தை எப்போது பார்த்தாலும் குழந்தைபோல அழுகிறேன் எனவும், எங்களைபோல நீங்களும் அழுதீர்களா என்றும் பிரீத்தி ஜிந்தாவிடம் சமூக வலைதளத்தில் கேட்டார்.
இதற்கு பதிலளித்து பிரீத்தி வெளியிட்ட பதிவில்,
"ஆம், நான் அதை பார்க்கும்போதும் அழுதேன், அதைப் படமாக்கும்போதும் அழுதேன். எனது முதல் காதல் ஒரு கார் விபத்தில் இறந்தது, எனவே இந்தப் படம் எப்போதும் என் நினைவில் இருக்கும்.
இதில், வேடிக்கையான உண்மை என்னவென்றால், பெரும்பாலான காட்சிகளில் அனைத்து நடிகர்களும் இயல்பாகவே அழுதனர்...அமனின் மரணக் காட்சி அனைவரையும் கேமராவின் முன்னும் பின்னும் அழ வைத்தது' என்றார்.
பிரீத்தி ஜிந்தா தனது 13-வது வயதில் தனது தந்தை துர்கானந்த் ஜிந்தாவை இழந்தார். இந்திய ராணுவ அதிகாரியாக இருந்த அவர் ஒரு கார் விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.