திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில் 2வது நாளாக ஆய்வு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள்

3 months ago 14

*அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

திருவண்ணாமலை : தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தமது ஆய்வுப் பணியை தொடங்கினார்.

அதன்படி, திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை நேற்று முன்தினம் இரவு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாெமாழி ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக நேற்றும் ஆய்வுப் பணி தொடர்ந்தது. அதன்படி, நேற்று காலை செங்கம் தொகுதிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். அப்போது, காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை வழங்கினார்.

மேலும், புத்தக பை, சீருடை, நோட்டுப்புத்தகங்கள் போன்ற விலையில்லா கல்வி உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார். மேலும், காலை உணவு வழங்கப்படுவதை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, மாணவர்களின் கற்றல் திறன்களை ஆய்வு செய்தார். மேலும், பள்ளிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

அதைத்தொடர்ந்து, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மேல்வன்னியனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய திறனறி தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை அறிந்து, வாழ்த்து தெரிவித்தார்.பின்னர், போளூர் தொகுதிக்கு உட்பட்ட களம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களிடம் அமைச்சர் கலந்துரையாடினார்.

விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் இருக்கிறதா, முறையாக பயன்படுத்துகின்றனரா? என விசாரித்தார். மேலும், வகுப்பறைகளுக்கு சென்று, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு நடத்தினார்.அதைத்தொடர்ந்து, ஆரணி விஏகே நகரில் உள்ள ஸ்மார்ட் கிட்ஸ் மழலையர் பள்ளியில், மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து ஆய்வு நடத்தினார். அப்பள்ளியில் அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா என பார்வையிட்டார். பின்னர், வந்தவாசி அரசு பள்ளியில் ஆய்வு நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, செய்யாறில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். அப்போது, மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் விநியோகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த இரண்டு நாட்களாக நடத்திய திடீர் ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில் 2வது நாளாக ஆய்வு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article