திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு: தொடர்ந்து நடைபெறும் மீட்கும் பணிகள்

2 months ago 10

திருவண்ணாமலை: பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், மண் சரிவினால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணியின்போது மண்ணை அகற்றும்போது பொக்லைன் இயந்திரத்தின் முன்பக்க பக்கெட்டில் 3 பேரின் உடல் மீட்கப்பட்டது. இதில் ஒருவர் சிறுவன் என தகவல் வெளியாகியுள்ளது. 7 பேர் சிக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் 3 பேரின் சடலம் மீட்கப்பட்டது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணில் புதையுண்டு 24 மணி நேரத்திற்கு பிறகு 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அடுத்த அரை மணி நேரத்தில் மண் சரிவில் சிக்கியுள்ள மற்றவர்களும் மீட்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

The post திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு: தொடர்ந்து நடைபெறும் மீட்கும் பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article