திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

2 hours ago 2

*முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் நடவடிக்கையை கைவிடக்கோரி, முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனாலும், குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்த நிலையிலும் சம்மந்தப்பட்ட 7 கட்டிடங்கள் அகற்றப்படவில்லை. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதையொட்டி, போலீஸ் பாதுகாப்புடன் ஜெசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 20க்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனால், போக்குவரத்து பாதித்தது. அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முறையாக நோட்டீஸ் அளித்த பிறகே ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. மறியலில ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பதை கைவிடக்கோரி முதியவர் ஒருவர் திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக, போலீசார் விரைந்துச் சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

மேலும், தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு கட்டிடடங்கள் அனைத்தும் இடித்து அகற்றப்பட்டது.

The post திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article