திருமூர்த்தி அணை பக்கவாட்டு சுவர் கற்கள் சேதம்

4 hours ago 3

உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் பராமரிப்பு இல்லாததால், பக்கவாட்டு சுவர் கற்கள் சேதமடைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் உழுவி ஆறு, கொட்டையாறு, பாரப்பட்டி ஆறு, குருமலை ஆறு, வண்டியாறு, உப்புமண்ணம் ஓடை, கிழவிப்பட்டி ஓடை ஆகிய ஆறுகளும், ஓடைகளும் ஒன்றிணைந்து பாலாறாக அடிவாரத்தை அடைகிறது. இந்த பாலாற்றின் குறுக்கே 1967ம் ஆண்டு திருமூர்த்தி அணை கட்டப்பட்டது. பிஏபி தொகுப்பணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு, பரம்பிக்குளம் அணையிலிருந்து சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையம் வழியாக, காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 3.77 சதுர கி.மீ. நீர்த் தேக்க பரப்பு கொண்ட அணையின் கொள்ளளவு 351 மில்லியன் கனஅடி ஆகும்.

இது 8622 அடி நீளத்துக்கு களிமண் அணையாகவும், 170 அடி நீளத்துக்கு கல் அணையாகவும் கட்டப்பட்டுள்ளது. அணை மூலம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஏராளமான குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது அணையின் நீர் இருப்பு மொத்தமுள்ள 60 அடியில் 47.11 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 6 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 21 கன அடியாகவும் உள்ளது. இந்நிலையில், அணை பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது. முழுமையாக தூர்வாரப்படாததால், சேறும் சகதியும் நிரம்பி பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.

அணையின் நீர்த் தேக்கப் பரப்பும் குறைந்துள்ளது. அத்துடன் அணையின் மீது அமைக்கப்பட்ட சாலையை ஒட்டி, பக்கவாட்டு பாதுகாப்பு சுவர் கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் அணையின் உறுதித் தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கவும், முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் விலியுறுத்தி உள்ளனர்.

The post திருமூர்த்தி அணை பக்கவாட்டு சுவர் கற்கள் சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article