சேலம்: பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே யார் தலைவர் என்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்புமணி ஆதரவாளரான மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ராமதாசும், அன்புமணியும் ஒரே குடும்பம். அவர்கள் குறித்து சாதாரண எம்எல்ஏக்கள் கருத்து கூறுவது உகந்ததாக இருக்காது. ராமதாஸ் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர். உலக தலைவர். பிரதமரால் பாராட்டப்பட்டவர். அதனால் அவரை பற்றி பதில் சொல்வது சரியாக இருக்காது. அன்புமணியும் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். அவரை பற்றியும் ஊடகத்திற்கு பதில் சொல்வது ஆரோக்கியமாக இருக்காது. இருவரும் விரைவில் இணைவார்கள். நல்ல காலம் வருது.
தற்போதைய நிலை நீர்க்குமிழி போன்றது. பாட்டாளி மக்கள் கட்சியோ, வன்னியர் சமுதாயமோ முன்னேறாமல் தமிழகம் முன்னேறாது. இவ்வாறு சதாசிவம் எம்எல்ஏ கூறினார். அன்புமணி ஆதரவு கூட்டத்தில் பங்கேற்று வரும் மேட்டூர் சதாசிவம் எம்எல்ஏ திடீரென ராமதாசுக்கு ஆதரவாக பேசியிருப்பது பாமகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி தான் நிரந்தர தலைவர்: சிவக்குமார் எம்எல்ஏ உறுதி
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றிய பாமக செயற்குழு கூட்டம் கூட்டேரிப்பட்டில் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் தலைமை தாங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், வன்னியர் சங்கம் தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் வருகின்ற 20ம்தேதி விழுப்புரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஒன்றிணைந்து வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்பு கருவியை பதுக்கி வைத்தவர்கள் மீது காவல்துறை விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 2026 ஜூன் வரை அன்புமணிதான் பாமகவின் அதிகாரமிக்கத் தலைவர். நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சி குறித்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்திலும், அன்புமணி எடுக்கும் முடிவே சட்டப்படி செல்லும். எனவே பாமகவின் நிரந்தர தலைவர் அன்புமணிதான் என்றார்.
அன்புமணி வீட்டிற்கு சென்ற தாயார் சரஸ்வதி: குடும்பத்தினருக்கு ஆசி வழங்கும் வீடியோ வைரல்
சென்னையில் நடைபெறும் ஏ.கே.மூர்த்தி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டு. இளைய மகள் கவிதா வீட்டில் மனைவி சரஸ்வதியுடன் தங்கினார். இதனிடையே சென்னை அக்கரையில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு அவரது தாயார் சரஸ்வதி நேற்று மதியம் திடீரென சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கிய தாயை கட்டித் தழுவி வரவேற்ற அன்புமணி, வீட்டிற்குள் அழைத்து சென்றார்.
அவரிடம் அன்புமணி, மனைவி சவுமியா மற்றும் மகள்கள், மருமகன்கள் ஆசிபெற்றனர். அதன்பிறகு அவரை கார் வரை அழைத்துச் சென்று அன்புமணி ஏற்றிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகன் அன்புமணி மீது ராமதாஸ் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், அவரது மனைவி சரஸ்வதி அன்புமணியை பார்த்து குடும்பத்தினருக்கு ஆசி வழங்குவதாக ஆதரவாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
The post ராமதாஸ் பற்றி சாதாரண எம்எல்ஏக்கள் பேசக்கூடாது: மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் திடீர் ஆதரவு appeared first on Dinakaran.