மாமல்லபுரம், ஜூலை 15: மாமல்லபுரம் நகராட்சிக்குட்பட்ட, வடக்கு மாமல்லபுரம் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். மாமல்லபுரம் இசிஆர் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள சோழி பொய்கை குளக்கரையை ஒட்டி ஆதிதிராவிடர் மக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு காரிய மேடை உள்ளது. தற்போது, அந்த குளக்கரையையொட்டி மாமல்லபுரம்-புதுச்சேரி வரை 4 வழிச்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. 4 வழிச்சாலை பணி முழுமையாக முடிவு பெற்றால், இசிஆர் சாலையை கடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும், அந்த குளத்தில் இருந்து தான் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழாவுக்காக கெங்கை அம்மன் கோயிலுக்கு சாமி புறப்பாடு நடப்பது வழக்கம்.
இந்நிலையில், ஆதிதிராவிடர் மக்களின் நலன் கருதி, மாமல்லபுரம் நகராட்சி நிர்வாக நிதியில் இருந்து குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, கெங்கை அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாசி குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தவும், காரிய மேடை அமைத்து தரவும், இசிஆர் சாலையில் மூடப்பட்ட கால்வாயை மீண்டும் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஏற்கனவே மாவட்ட கலெக்டராக இருந்த அருண்ராஜிடமும், மல்லை நீர் நிலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் கெங்கை அம்மன் கோயில் நிர்வாகிகள் பலமுறை நேரில் சென்று மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க யாரும் முன்வரவில்லை.
இருப்பினும், கெங்கை அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாசி குளத்தில் படிந்துள்ள பாசிகளை அகற்றி குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிதி ஒதுக்காமல் அலைகழித்து வந்தது. இந்நிலையில், மல்லை நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் கெங்கை அம்மன் கோயில் நிர்வாகமும் இணைந்து, பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் நிதி திரட்டி, தனியார் பங்களிப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் பாசி குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தி, அதன் அருகில் காரிய மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கெங்கை அம்மன் கோயில் நிர்வாகிகள் மல்லை சிறுத்தை கிட்டு, ராமலிங்கம், ரங்கநாதன், சிவக்குமார் மற்றும் பிரகாஷ் மற்றும் வினோத் ஆகியோர் நிதி திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிரபல சமூக ஆர்வலர் கிருஷ்ணராஜ், அதிமுக நிர்வாகிகள் கணேசன், எஸ்வந்த்ராவ் மற்றும் அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் தாமாகவே முன்வந்து நிதி கொடுத்து வருகின்றனர்.
The post நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்காததால் பொதுமக்களிடம் நிதி திரட்டி பாசி குளம் தூர்வாரி சீரமைப்பு appeared first on Dinakaran.