ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் அரசுக்குச் சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். அங்கிருந்த கடைகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன. ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சி.டி.எச். சாலையில் 1.68 ஏக்கர் கொண்ட கணக்கன் குட்டை உள்ளது. அரசு நீர் நிலை புறம்போக்கு நிலமான இந்த குட்டையில், கடந்த 30 ஆண்டுகளாக, மரம் அறுக்கும் கடை, சிமென்ட் குடோன், லேத் பட்டறை, ஹார்டுவேர்ஸ் உட்பட 9 தனியார் நிறுவனங்கள், கடைகளை அமைத்து வருவாய் ஈட்டி வந்தனர். கடந்த 2018 முதல் இந்த நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஆண்டு சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், கடந்த 6ம் தேதி, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், ஆவடி தாசில்தார் உதயம் தலைமையிலான வருவாய்த்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றினர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க திருமுல்லைவாயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post திருமுல்லைவாயலில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: கடைகள் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.