சிம்லா,
இமாசலபிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தில் சகி என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த வாலிபர் ஜிதேஷ் சர்மாவுக்கு அண்மையில் திருமணம் முடிந்தது. இல்லற வாழ்க்கையை தொடங்க கனவுடன் இருந்த புதுமாப்பிள்ளையான ஜிதேஷுக்கு திருமணம் முடிந்த சில நாட்களில் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது, திருமணம் முடிந்த சில நாட்களில் மனைவி பணம் நகையுடன் புதுப்பெண் தப்பி ஓடியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை போலீசில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
பால்தேவ் சர்மா என்ற தரகர் மூலம், பபிதா என்ற பெண்ணை நான் சந்தித்தேன். திருமணத்திற்காக பால்தேவ் ரூ. 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கினார். நிச்சயிக்கப்பட்டபடி, கடந்த டிசம்பர் 13-ந்தேதி பபிதாவை கோவிலில் வைத்து திருமணம் செய்தேன். பெண்ணுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் பதிவு திருமணம் செய்யாமல் கோவிலில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்தேன்.
திருமணம் முடிந்த சில நாட்களில் தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, பார்த்து வருகிறேன் என்று கூறிவிட்டு பபிதா சென்றார். 2 நாட்களுக்குப் பின்பு அவர் திரும்ப வராமல் இருந்ததுடன் போன் அழைப்புகளையும் எடுக்கவில்லை. அவர் வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்று ஏமாற்றிவிட்டார். தரகர் பால்தேவ் சர்மாவும் அழைப்புகளை ஏற்க மறுக்கிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது புகாரில் ஜிதேஷ் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.