சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் வெளியாயிற்று. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் இதுவரை சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பல படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். அதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த நிலையில், 'அமரன்' படம் வெளிவந்து 100 நாட்களை தாண்டிய நிலையில், சிப்பாய் விக்ரம் இல்லாமல் இப்படம் முழுமையடையாது என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் 'இந்தக் கதையில் இரண்டு துணிச்சலான இதயங்களின் கதையைச் சொல்ல முடிந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. கடமையால் பிணைக்கப்பட்டு, அவர்களின் மரபால் அழியாத மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரமின் பிணைப்பு சகோதரத்துவம் மற்றும் தோழமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு! சிப்பாய் விக்ரமை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்காக அவரது குடும்பத்தினரின் தாராள மனப்பான்மைக்கு எனது மனமார்ந்த நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.