திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜ கோபுரம் எதிரில் நின்று, ராஜ கோபுரம் மற்றும் உள்கோபுரத்தை தரிசனம் செய்து தேரடி பாதையின் இடது புறம் உள்ள முனீஸ்வரரை வணங்கியதும் மலைவல பாதையில் நடக்க தொடங்க வேண்டும். கிரிவலப் பாதையில் 40-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பல மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகளும் அமையப்பெற்றுள்ளன.
இருப்பினும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய அஷ்ட லிங்கங்களை மட்டும் தரிசனம் செய்தபடி கிரிவலம் வந்தாலே முழு பலனும் கிடைக்கப்பெறும்.
கிரிவலப்பாதையில் உள்ள ஆதி அருணாச்சலேஸ்வரர் ஆலயம், இந்திரன் சாபவிமோசனம் பெற்ற தலம். இங்கு இறைவன், அம்பாள் அபிதகுஜலாம்பாள் சமேதராக காட்சி தருகிறார். கிரிவலம் செல்வோரில் ஒரு பகுதியில் மலை வழியில் உள்ள கடைசி லிங்கமான ஈசான்ய லிங்கத்தை சிலர் தரிசிக்காமல், வேறு வழியில் சென்று விடுகின்றனர். இது தவறாகும். ஈசான்ய லிங்கத்தை தரிசனம் செய்வதே முழு பலனையும் தரும்.
கிரிவலம் வருவதால் உடல் உறுப்புகள் பலம் பெற்று, ரத்த ஓட்டம் சீராகும். மலையை சுற்றியுள்ள பல்வேறு மூலிகைச் செடிகளின் வாசத்தை முகர்வதால் உடல் நோய்கள் அகலும். சில மணி நேரம் வேறு எந்த சிந்தனையும் இன்றி, இறை சிந்தனையுடன் நடப்பதால் மனதில் உள்ள சஞ்சலங்கள் தீர்ந்து, மனஅமைதி கிடைக்கும்.