நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு

2 hours ago 1

பெங்களூரூ,

கர்நாடகத்தில் சித்தராமையா (வயது 76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில கவர்னரிடம் மனு அளித்தனர்.

இந்த விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு, விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது. இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற ஆர்டிஐ ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவினை கர்நாடக ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்தது. இதனிடையே, சமூக ஆர்வலரும், மனுதாரருமான கிருஷ்ணா, சிபிஐக்கு மாற்ற மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட இருப்பதாக தெரிவித்தார். இந்த தீர்ப்பினை வரவேற்பதாகவும், தீர்ப்பினை மதிப்பதாகவும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Read Entire Article