
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரிங்கி குமாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மந்து குமாருக்கும் கடந்த 5ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப்பின் கடந்த 9ம் தேதி மந்து குமார் தனது மனைவி ரிங்கி குமாரியின் வீட்டிற்கு வந்துள்ளார். புதுப்பெண் வழியனுப்பு நிகழ்ச்சிக்காக மந்து குமார் மனைவியை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனிடையே, ரிங்கி குமாரி அதே பகுதியை சேர்ந்த அபிமன்யு குமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ரிங்கி குமாரியை மந்து குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், கணவர் மந்துவுடன் தாயார் வீட்டிற்கு சென்ற ரிங்கி நேற்று முன் தினம் (12 ம் தேதி ) காலை கழிவறைக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் ரிங்கு வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கிராமம் முழுவதும் தேடினர். பின்னர், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், ரிங்கி அவரது காதலன் அபிமன்யுவுடன் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் காதலிப்பதாக கூறினர். மேலும், காதலன் அபிமன்யுவுடன் வாழவே விரும்புவதாக ரிங்கி கூறினார். இதைக்கேட்டு ரிங்கியின் கணவன் மந்து அதிர்ச்சியடைந்தார்.
ரிங்கி 18 வயது பூர்த்தியடைந்த இளம்பெண் என்பதால் அவரின் முடிவே இறுதியானது என போலீஸ் கூறினர். மேலும், சட்ட நடைமுறைகள் முடிந்தபின் இருவரும் விடுதலை செய்யப்படுவர் என்று போலீசார் தெரிவித்தனர். மனைவி காதலனுடன் சென்றதால் புதுமாப்பிள்ளை மந்து விரக்தியுடன் வீடு திரும்பியுள்ளார். திருமணமான 7வது நாளில் காதலன் அபிமன்யுவுடன் புதுப்பெண் ரிங்கி ஓட்டம்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.