
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
"அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவுகிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் சிலவற்றில் நிலவும் குறைகளைச் சுட்டிக்காட்டி தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்பதும், அதற்கு தி.மு.க. அரசு சப்பைக்கட்டு கட்டி பதில் அளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த ஆண்டு மொத்தமுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரவுக் குறைபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த அறிவிக்கை ஒன்றே தி.மு.க. அரசு எந்த அளவுக்கு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், தோல் மருத்துவம் உள்ளிட்ட 96 சதவீத துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன என்றும், உதாரணத்திற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 துறைகளில் 19 துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என்றும், இதேபோன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 துறைகளில் 8 துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் அளித்த மேற்படி தரவுகளின் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையம் தற்போது விளக்கம் கேட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் கல்வி இயக்குநர், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும், பெரும்பாலானோர் ஒரு சில நாட்களில் பணியில் சேர்ந்து விடுவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு முற்றிலும் மாறான கருத்துகளை மருத்துவர்களுக்கான அமைப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக உரிய நேரத்தில் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு அளிக்காததன் காரணமாக, தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது இயலாத ஒன்று என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30 சதவீத அளவுக்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், 2023-ம் ஆண்டிற்கான கலந்தாய்வே இப்பொழுதுதான் முடிந்து இருக்கிறது என்றும், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்த தவறிவிட்டது என்றும் அரசு மருத்துவர்களுக்கான பல்வேறு சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்காக ஒரு கோடி ரூபாய் வரை அரசு மருத்துவக் கல்லூரிகள் மீது அபராதம் விதிக்க சட்ட விதிகளில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி பார்த்தால், 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 34 கோடி ரூபாய் மக்கள் பணம் விரயம் என்பதோடு, மருத்துவ மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று சொல்லிவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் கூட காலிப் பணியிடங்களை நிறைவேற்றாதது வெட்கக்கேடானது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டிலாவது அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.