திருமணத்தன்று பள்ளி ஆசிரியை தற்கொலை

3 hours ago 1

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர், தேனி அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார். அவருடைய மகள் கவுசல்யா என்ற சவுமியா (வயது 24). இவர், ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். சவுமியாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த பாலாஜிக்கும் (28), சவுமியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பாலாஜி, பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். திருமணத்துக்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை, கம்பம் புதுப்பட்டியில் உள்ள பாலாஜியின் வீட்டில் பாலாஜிக்கும், சவுமியாவுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் மாலையில் மறுவீடு நிகழ்ச்சிக்காக, கதிர்நரசிங்கபுரத்தில் உள்ள பரமேஸ்வரன் வீட்டுக்கு புதுமண தம்பதி சென்றனர். மகளை பார்த்ததும், பரமேஸ்வரன் ஆனந்த கண்ணீர்விட்டு வரவேற்றார்.

பின்னர் மறுவீடு சடங்குகளுக்கான ஏற்பாடுகளை பரமேஸ்வரன் குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது களைப்பாக இருப்பதால், முகம் கழுவிவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு தனது படுக்கை அறைக்கு சவுமியா சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரம் ஆகியும் சவுமியா அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜி மற்றும் உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால் சவுமியா கதவை திறக்கவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள், படுக்கையறை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

அப்போது சவுமியா, படுக்கை அறையில் இருந்த கொக்கியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுமியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணத்தன்று சவுமியா தற்கொலை செய்து கொண்டதால், பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் விசாரணை நடத்தி வருகிறார். காலையில் மணக்கோலத்தில் இருந்த பெண், மாலையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Read Entire Article