திருப்பூரில் வெடி விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலி: உரிமையாளர், நாட்டு வெடி தயாரித்தவர் கைது; 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

3 months ago 20

திருப்பூர்: திருப்பூரில் நாட்டு வெடிகள் வெடித்து குழந்தை உள்பட 3 பேர் பலியான விபத்தில் வீட்டு உரிமையாளர், நாட்டு வெடி தயாரித்தவர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன்நகர் பொன்னம்மாள் வீதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சத்தியப்பிரியா. இவர்களுக்கு சொந்தமான வீட்டின் முன்புறம் உள்ள காலியிடம், மளிகை கடை வாடகைக்கும் விடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பலர் குடியிருந்து வருகின்றனர்.

நேற்று மதியம் இந்த காலி இடத்தில் கோயில் திருவிழாக்களுக்காக நாட்டு வெடிகள் உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகள் வெடித்து சிதறியது. இதில் மளிகை கடை தரைமட்டமானது. கார்த்திக் வீடு உள்பட 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. நம்பியூரை சேர்ந்த விஜயா, 9 மாத மாத குழந்தை ஆலியாஷெரின், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் குமார் (37) என 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்த ராமசாமி, சம்பூர்ணம் மற்றும் அக்கம் பக்கத்தினர் என 14 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி, மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். 50 கிலோவுக்கு மேல் இருந்த வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வெடிபொருள் சட்டம் பிரிவு 3 (உயிர் அல்லது உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடிவைத்தல்), 5ஏ (சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வெடிபொருட்களை தயாரித்தல் அல்லது வைத்திருந்தமைக்கான குற்றம்) 9பி (உரிமம் இல்லாமல் வெடிபொருள் வைத்திருப்பது, அல்லது ஏற்றுமதி, இறக்குமதி செய்வது) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து வீட்டு உரிமையாளர் கார்த்திக் மற்றும் நம்பியூரில் நாட்டு வெடிகள் உற்பத்தி செய்யும் குடோன் மற்றும் கடை வைத்துள்ள சரவணகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருவரையும் இன்று காலை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து கார்த்திக் மனைவி சத்திய பிரியாவின் சகோதரரான நம்பியூரை சேர்ந்த சரவணகுமார் (40) என்பவர் கோயில் திருவிழாக்களுக்கான நாட்டு வெடிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் கடை, குடோன் வைத்துள்ளார். அதற்குரிய லைசென்ஸ் கடந்த டிசம்பருடன் முடிந்து விட்டது. மறு உரிமத்துக்காக விண்ணப்பித்துள்ளார். இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. திருவிழா சமயம் என்பதால் கடையில் அதிகளவு இருப்பு இருந்துள்ளது. அதனால் கடந்த 2 வாரங்களாக வெடி பொருட்களை கார்த்திக் வீட்டில் வைத்து உற்பத்தி செய்துள்ளனர்.

நம்பியூரில் உள்ள கடைக்கு சரவணகுமார் லைசென்ஸ் வைத்திருந்த நிலையில் வீட்டில் வைத்து உற்பத்தி செய்வதற்கான எந்த அனுமதி பெறவில்லை. சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் வைத்து வெடிபொருட்கள் உற்பத்தி செய்து வந்தது தெரியவந்தது. நம்பியூரில் உள்ள குடோனில் கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து ஆய்வு அறிக்கை நம்பியூர் வருவாய் வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்க உள்ளார்.

எச்சரிக்கை: திருப்பூர் மாநகர பகுதிகளுக்குள் வெடி மருந்து அல்லது பட்டாசு தயாரிப்பது குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை அல்லது ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் பொதுமக்கள் உனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். அதேபோல் சட்ட விரோதமாக மாநகரில் எவ்விதமான பட்டாசு உற்பத்தி மற்றும் அனுமதி இல்லாமல் விற்பனை செய்ய கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post திருப்பூரில் வெடி விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலி: உரிமையாளர், நாட்டு வெடி தயாரித்தவர் கைது; 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article