திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது

3 hours ago 2

திருப்பூர்,

திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த மொதிர் ரகுமான், அவருடைய மனைவி அஞ்சனா அக்தர் ஆகியோர் வங்கதேசம் டாக்கா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து நிட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பணியாற்றியது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன. முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வங்கதேச நாட்டினரை போலீசார் கைது செய்யும் நடவடிக்கை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article