இந்தியாவுக்கு லாபம்

6 hours ago 2

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார். "அமெரிக்கா முதலில்" என்பதுதான் தன் லட்சியம் என்று வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். ஒவ்வொரு நாளும் அவர் பிறப்பிக்கும் உத்தரவுகள் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தநேரத்தில் டிரம்ப் கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்து இருந்தார். இதற்கு சட்டவிரோதமாக அந்த நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் நுழைந்து அமெரிக்காவில் குடியேறியதையும், போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதை தடுக்கவும் தவறியதாக காரணம் கூறப்பட்டு இருந்தது.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புகையிலை பொருட்கள், காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள், ஆயுதங்கள், ராணுவம் சார்ந்த பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்து இருந்தது. இந்த பரபரப்பான நேரத்தில் கனடாவும், மெக்சிகோவும் சட்டவிரோத குடியேற்றவாசிகள், போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத்தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கும் விதித்திருந்த கூடுதல் வரி ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் திடீரென்று இரும்பு (ஸ்டீல்), அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீதம் கூடுதலாக வரிவிதித்து பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார். முன்னதாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியை பிறப்பித்து அது அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் இதற்கு சீனா அசரவில்லை.

பதிலடியாக அமெரிக்காவில் இருந்து சீனாவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது கூடுதலாக 15 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெய், விவசாய பண்ணை கருவிகள், பெரிய மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கு 10 சதவீதம் கூடுதல் இறக்குமதிவரி விதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு இருப்பது இந்தியாவுக்கு லாபமாகவே கருதப்படுகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் செல்போன்கள், மின்னணு பொருட்கள், மின்னணு எந்திரங்கள், ஆடைகள், தோல்பொருட்கள், காலணிகள், பர்னிச்சர்கள், மருந்து பொருட்கள், பொம்மைகள் போன்ற பல பொருட்களுக்கு இனி கூடுதல் ஆர்டர்கள் கிடைக்கும்.

ஒரே பொருட்களை இந்தியாவிலும், சீனாவிலும் தயாரிக்கும் சில நிறுவனங்களிடம் அமெரிக்காவில் உள்ள இறக்குமதியாளர்கள் அந்த பொருட்களை இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் இருந்தே சப்ளை செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். பொதுவாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடக்கும்போதெல்லாம் இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்து இருக்கிறது.

எடுத்துக்காட்டாக 2018-ல் இதுபோல அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் வர்த்தக போர் தொடங்கிய நேரத்தில் இந்தியா 57 பில்லியன் டாலர் (ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 259 கோடியே 23 லட்சம்) அளவுக்குத்தான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. ஆனால் 2 ஆண்டுகள் நடந்த இந்த வர்த்தக போரினால் இந்தியாவின் ஏற்றுமதி 73 பில்லியன் டாலர் (ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்து 113 கோடியே 44 லட்சம்) அளவுக்கு கணிசமாக உயர்ந்துவிட்டது. அதுபோல இப்போதும் இந்தியாவின் ஏற்றுமதியில் ஒரு பெரிய ஏற்றம் ஏற்படும். மேலும் இப்போது அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு சரிந்து இருப்பதால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

Read Entire Article