திருப்புவனம் இளைஞர் மரண விவகாரத்தில் உடனடி நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

9 hours ago 1

திருச்சி,

திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு என்கிற இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 30 சதவீதம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை மூலமாக அந்த எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகமாகும். உறுப்பினர் சேர்க்கையின் மூலமாக வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகள், மத்திய அரசு எந்தெந்த வகையில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளது என்பது குறித்து எடுத்து கூறுவோம்.

திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் அவர் முதல்-அமைச்சராக இருந்த போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி.யை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறினார். இளைஞர் மரண விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வேறுயாரும் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டும் தான் வலுவாக உள்ளது. திமுகவில் உட்கட்சி பிரச்சினை அண்ணன்-தம்பி பிரச்சினை தான். அதை பேசி தீர்த்து கொள்வோம். சட்டமன்ற தேர்தலில் யார், யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவார்கள். கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதையெல்லாம் தலைவர் தான் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article