
புழல் அடுத்த கதிர்வேடு பிரிட்டானியா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 57). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் முன்பதிவு அலுவலகம் நடத்தி வந்தார். இரவது மனைவி மாலா. இவர்களது மகன்கள் சுமன்ராஜ்(15), கோகுல்ராஜ்(13), மகள் இதயா. இவர்களில் சுமன்ராஜ் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பும், கோகுல்ராஜ் 9ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று இரவு செல்வராஜ் குடும்பத்துடன் சாப்பிட்டார். பின்னர் அனைவரும் தூங்க சென்றனர். செல்வராஜூம் அவரது மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் ஆகியோர் தனி அறையிலும், மாலாவும் அவரது மகள் இதயாவும் மற்றொரு அறையிலும் தூங்கினர். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் செல்வராஜூம் அவரது 2 மகன்களும் இருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மாலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு கணவர் செல்வராஜ் மற்றும் மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜூம் அவரது மகன்களும் பிணமாக கிடந்த அறையில் ஜெனரேட்டர் புகை இருந்தது. நேற்று இரவு 2 மணியளவில் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. இதையடுத்து செல்வராஜ் வீட்டில் உள்ள ஜெனரேட்டரை இயக்கி உள்ளார். அதில் இருந்து வெளியேறிய புகை அறைக்குள் பரவி உள்ளது. எனவே அவர்கள் இந்த புகையால் இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இறந்து போன 3 பேரின் வாயிலும் நுரை தள்ளி இருந்ததால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவர்கள் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்வராஜின் மனைவியும், மகளும் மற்றொரு அறையில் தூங்கியதால் அவர்கள் உயிர் தப்பினர். கணவர் மற்றும் 2 மகன்களின் உடல்களை பார்த்து மாலா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது செல்வராஜ் மற்றும் அவரது 2 மகன்களின் பிரேத பரிசோதை அறிக்கைக்கு பின்னரே அவர்கள் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும். அதனை வைத்து அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.