
ரோம்,
உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.
வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் நடந்த இந்த நிகழ்வில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கு தகுதி வாய்ந்த 133 கார்டினல்கள் கூடினர். நேற்று முன்தினம் நடந்த முதல் வாக்கெடுப்பில் 3-ல் 2 பங்கு ஆதரவு அதாவது 89 வாக்குகளை யாரும் பெறாததால் புதிய போப் தேர்வாகவில்லை.
புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதை பாரம்பரிய முறைப்படி புகை போக்கி வழியாக கரும்புகை வெளியிட்டு உலகிற்கு அறிவித்தனர். தொடர்ந்து நேற்று காலையில் நடந்த 2 வாக்களிப்பிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
எனவே மாலையில் மீண்டும் கார்டினல்கள் கூடி புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த முறை புதிய போப் ஆண்டவர் தேர்வானார். இதையடுத்து சிஸ்டைன் சிற்றாலய புகைபோக்கியில் வெண்புகை வெளியிடப்பட்டு, புதிய போப் தேர்வாகிவிட்டார் என்பது உலகிற்கு அறிவிக்கப்பட்டது.
இதன்படி வட அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் கத்தோலிக்கர்களின் 267-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என்று கார்டினல்கள் அறிவித்தனர்.
பின்னர் புதிய போப் ஆண்டவர் 14-ம் லியோ பால்கனியில் தோன்றி அங்கே கூடியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கி பேசினார். அப்போது இத்தாலிய மொழி மற்றும் ஸ்பானிஷ் மொழி ஆகியவற்றில் போப் லியோ பேசினார்.
இதைத் தொடர்ந்து, போப் லியோ தனது முதல் திருப்பலியின் தொடக்கத்தில் கார்டினல்கள் முன்னிலையில் முதல் முறையாக ஆங்கிலத்தில் உரையாற்றினார். அப்போது "சிலுவையை சுமக்கவும், ஆசீர்வாதத்தைப் பெறவும் நீங்கள் என்னை தேர்வு செய்தீர்கள். கத்தோலிக்க நம்பிக்கையை பரப்ப நீங்கள் உதவ வேண்டும்" என்று போப் லியோ குறிப்பிட்டார்.