மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான ஒரு மணி நேரம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் வெறுப்பைத் தூண்டும் முழக்கங்களைத் தவிர்க்கவும், ஆர்ப்பாட்டம் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் உயர் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் 16 கல் மண்டபம் முன்பு இன்று (பிப்.4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இப்பிரச்சினை காரணமாக இரு தரப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவும் காரணத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.