திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தர்காவில் காங்கிரசார் இன்று சிறப்பு வழிபாடு

2 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் திருப்பரங்குன்றத்தில் உள்ள கோவில் மற்றும் தர்காவில் இன்று வழிபாடு நடத்தப்படும் என்று மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வட மாநிலங்களில் இவர்களது மத அரசியல் தோல்வி அடைந்து வருகிறது, இப்போது ஆறுபடை வீடை கலவரப் பூமியாக மாற்றுவதற்கு, அந்த கும்பல் வெளியில் இருந்து மக்களைக் கொண்டு வந்து உள்ளூர் மக்களுக்கு எதிராக பிரச்சினையை உருவாக்கி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். 6-ம் தேதி (இன்று) தமிழக காங்கிரஸ் சார்பில் திருப்பரங்குன்றத்தில் ஆலய வழிபாடு செய்ய இருக்கிறோம், அதேபோன்று சிக்கந்தர் பாதுஷாவையும் வழிபட இருக்கிறோம்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்நிய முதலீடு, தொழிற்சாலை உற்பத்தி, உள்நாட்டு உற்பத்தி ஏற்றுமதி, கல்வித்துறை புரட்சி உள்ளிட்டவை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதைக் கெடுக்கவும், தமிழகத்தை கலவர பூமியாகவும் மாற்றவும், பாஜக துணையோடு ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இதை அடக்க வேண்டும், முதல்-அமைச்சர், இதில் எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது,

எப்படியாவது திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஆக வேண்டும் என எல்லா குறுக்கு வழிகளையும் பயன்படுத்துகின்றனர். அதை ஆறுபடை முருகன் அனுமதிக்க மாட்டார். எச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் காலம்காலமாக இஸ்லாமியர்களைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள துலுக்க நாச்சியார் சிலையை யார் வைத்தது? அதை எதிர்த்து இவர்களால் போராட முடியுமா? சிக்கந்தர் பாதுஷாவை எதிர்த்து போராடும் இவர்கள் ஏன் துலுக்க நாச்சியாருக்கு எதிராக போர்க்கொடி தூக்க மறுக்கிறார்கள்?. தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க வேண்டும் என பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் நினைக்கின்றன. தமிழக மக்கள் ஒருபோதும் அதற்கு இடம் அளிக்கமாட்டார்கள்." என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

Read Entire Article