
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று பிற்பகலில் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்களை தங்களது சொந்த நாடு மற்றும் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியமும், சம்பந்தப்பட்ட அணிகளும் துரிதமாக ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வீரர்களில் பலர் உடனடியாக தங்களது வீடுகளுக்கு திரும்பியதாகவும், வெளிநாட்டு வீரர்களும் விமானம் மூலம் தங்களது நாட்டுக்கு புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் நகரில் சிக்கிய வீரர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரத்தில் மீண்டும் நடைபெறுமா? இல்லையா? என கேள்வி எழும்பி உள்ளது.