போர் பதற்றத்தை தணிக்க சீனா, கத்தார் உதவியை நாடிய பாகிஸ்தான்

4 hours ago 1

ஸ்ரீநகர்,

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது. இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் டிரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது.

இந்தியாவின் பதிலடியால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான், பகல் முழுவதும் பதுங்கியது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் 300 முதல் 400 டிரோன்களை இந்திய நிலைகளை நோக்கி ஏவியது. குறிப்பாக காஷ்மீர் மாநிலம் லே முதல் குஜராத் மாநிலம் சர்கிரீக் வரை உள்ள எல்லையோரத்தில் உள்ள 36 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது.

இவற்றையெல்லாம் நமது இந்திய ராணுவம் நடுவழியில் மறித்து ஏவுகணைகள் மூலம் அழித்தது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் இந்திய ராணுவம் தாக்கி, வலுவான பதிலடி கொடுத்தது.இதனிடையே நேற்று இரவு 7 மணியளவில் காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா, பூஞ்ச், உரி, நவ்காம் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.இந்திய எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சேத விவரம் தெரியவில்லை. இதற்கும் இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நேற்று இரவு மீண்டும் டிரோன்களை ஏவி 3-வது நாளாக வாலாட்டியது. இந்த முறை காஷ்மீரின் சம்பா, அக்னூர், பஞ்சாப் மாநிலத்தின் பெரோஜ்பூர், அமிர்தசரஸ் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் உள்பட 26 நகரங்களை குறிவைத்து டிரோன்களை ஏவியது.அவை அனைத்தையும் இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு சாதனங்கள் மூலம் ஏவுகணைகளை செலுத்தி வானத்திலேயே மறித்து அழித்தது. மேலும் காஷ்மீர் பகுதியில் வான்பாதுகாப்பு அமைப்பும் செயல்பாட்டுக்கு வந்தது. அந்த பகுதியில் வான்வழி தாக்குதல் நடந்தால் அதை இந்த அமைப்பு முறியடித்துவிடும்.

பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்கள் இருளில் மூழ்கின. மேலும் இந்த மாநிலங்களில் தொடர்ந்து அபாய ஒலி எழுப்பப்பட்டதால், பல இடங்களில் சைரன் ஒலிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருந்தனர். பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை இந்தியாவும் முறியடித்து வருகிறது. பாகிஸ்தானின் 4 விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள்கூறுகின்றன. ராவல்பிண்டியில் உள்ள விமானப்படை தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் கலங்கி இருக்கும் பாகிஸ்தான், பதற்றத்தை தணிக்க சீனா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் உதவியை ராஜாங்க ரீதியில் நாடியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய அவையில் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு மதிரி ஆசிப் காவ்ஜா இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

Read Entire Article