
ஜெய்ப்பூர்,
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் விளைவாக ராஜஸ்தானின் சர்வதேச எல்லைகளுக்கு அருகில் உள்ள முனாபாவ் கிராமத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 4 ரெயில்களை வடமேற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. மேலும் 5 ரெயில்கள் மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் மின்தடை மற்றும் அவசரகால நிலைமைகள் காரணமாக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.