பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்க முடியாது என்று கூறி மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் மத ரீதியிலான எந்தவொரு போராட்டங்களுக்கும் போலீஸார் ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் வகையில் சென்னையில் பிப்.18-ம் தேதி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவரான எஸ்.யுவராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.