திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில்

2 weeks ago 6

மதுரைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது திருப்பரங்குன்றம் திருத்தலம். இங்கு முருகப் பெருமான் அருள்பாலிக்கும் மலையானது, லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருள் செறிந்த மலை ஆகும். இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி, சிவசக்தியை நோக்கி ஆறுமுகப்பெருமான் தவமிருந்தார். மேலும் இங்குதான் தேவர்களின் தலைவனான இந்திரனின் மகள் தெய்வானையை, முருகப்பெருமான் கரம்பிடித்தார். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இதுவே முதல் படைவீடு என்பது சிறப்புக்குரியதாகும்.

குரு பக்தியின்றி ஞானம் பெற முடியாது. கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தைக் கேட்டார்.

புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தையும், அதன் உட்பொருளையும் அறிந்தவராக இருந்தபோதிலும், சிவனுக்கே அந்த மந்திரத்தை உபதேசம் செய்தபோதிலும், குருவின் மூலமாக கற்றுக்கொள்ளாததால் அது பாவமாக அமைந்தது. அந்த பாவம் நீங்குவதற்காக, திருப்பரங்குன்றம் மலை மீது முருகப்பெருமான் தவம் செய்தார்.

பலநாள் தவத்திற்குப் பிறகு சிவபெருமானும், பார்வதி தேவியாரும் அங்கு தோன்றி முருகப்பெருமானுக்கு காட்சி கொடுத்தனர். அப்படி அருள் செய்த சிவனும், பார்வதியும் 'பரங்கிநாதர்' என்றும், 'ஆவுடைநாயகி' என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும், திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் விளங்கி வருகிறது. எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன் - பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சி தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். தேவர்கள் துயர்கள் அனைத்தும் நீங்கப்பெற்றனர். அதனால் முருகப் பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில், இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி - பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

மதுரை நகரில் இருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருப்பரங்குன்றம் திருத்தலம் அமைந்திருக்கிறது. ரெயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையில் இருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது.

Read Entire Article