திருப்பரங்குன்றம் கோவிலில் மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

5 hours ago 2

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம் நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு ரூ.2 கோடியே 44 லட்சத்தில் 20 திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்திட அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதற்காக முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி 10-ந் தேதி ராஜகோபுரம் மற்றும் கோவிலின் உப கோவில்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது.

கடந்த 17-ந் தேதி அன்று முதற்கட்டமாக இந்த கோவிலின் துணை கோவில்களுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் 2-ம் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ராஜகோபுரம் திருப்பணிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இந்த சூழலில் ஜூலை மாதம் 14-ந் தேதி அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெறும் என்று சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதனையடுத்து முழு வீச்சில் இரவு, பகலாக திருப்பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் 3 கட்டமாக மலையை குடைந்து அமைந்துள்ள கருவறையில் திருப்பணிகள் செய்வதற்கு ஏதுவாக நாளை (9-ந்தேதி) மூலவர் சன்னதி பாலாலயம் நடக்கிறது. இதனையொட்டி நேற்று கம்பத்தடி மண்டப வளாகத்தில் அக்னி வார்க்கப்பட்டு பூர்வாங்கும் பூஜை நடந்தது.

கோவிலின் கருவறையில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகளில் இருந்து கும்பத்தில் சக்தி இறக்கப்பட்டு உற்சவர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலை முதல் மூலவர் சன்னதி செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் உற்சவர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்ட மூலஸ்தான சக்தியை வழிபடுவதற்காக உற்சவர் சன்னதிக்கு பக்தர்களுக்கு தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கோவிலுக்குள் திருவாட்சி மண்டபத்தில் 13 யாக குண்டம், 9 வேதிகை அமைக்கப்பட்டு நேற்று மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

நாளை காலையில் 4-ம் காலம் யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்படுகிறது. இதனையடுத்து கருவறையில் உள்ள 5 சன்னதிகளின் தெய்வங்களை தத்ரூபமாக அத்தி மரங்களில் உருவம் ஏற்படுத்தி உற்சவர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள கருவறையின் சக்தியை ஏற்றம் செய்து கோவிலுக்குள் உள்ள சண்முகர் சன்னதியில் எழுந்தருள செய்யக்கூடிய பாலாலயம் நடக்கிறது.

இதனையடுத்து 9-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் சண்முகர் சன்னதியானது தற்காலிக கருவறையாக பாவிக்கப்பட்டு ஆகம விதிக்கு உட்பட்டு தினமும் மூலவர் சன்னதியில் நடந்தது போலவே அனைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article