
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கும்பாபிஷேக முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியாபாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பொம்மதேவன், கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் கோவில் சிவாச்சாரியார்கள் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்றனர்.
கோவிலின் கருவறை, யாகசாலை, ராஜகோபுரத்தின் மேல்தளம் ஆகியவற்றை அமைச்சர்கள், கலெக்டர் பிரவீன்குமார், மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து வள்ளி தேவஸ்தான திருமண மண்டபத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:- முகூர்த்த தேதிகள் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் கும்பாபிஷேகம் நடக்காத நாளே இல்லை என்கிற பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளது.
நேற்று (அதாவது 7-ந் தேதி) 114 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. இது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு 14-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூரில் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட இல்லாமல் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடி சிறப்பாக, பாதுகாப்பாக கும்பாபிஷேகம் நடந்தது. அதேபோல் திருப்பரங்குன்றத்திலும் நடைபெறும். ராஜகோபுர மேல் தளத்தில் 1,700 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும் காட்சிகள் ஒளிபரப்பப்படும். 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 4 லட்சம் பேர் சாப்பிடுவதற்கு ஏற்ப அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக சன்னதி தெருவில் 16 மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடுவது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் கேட்டுள்ளோம். நிச்சயம் அவர் கொடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.