பாத மலர் தாராய்
அனைத்துயிர்க்கும் பிறப்பிடமாகவும், அடைக்கலமாகவும் விளங்குவது
ஆண்டவனின் திருவடிகளே ஆகும்.
“போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்’’
– என்று மணிவாசகர் பாடுகின்றார்.
மலர்ச் சிலம் படி வாழ்த்தி வணங்குவாம் என்கிறார் சேக்கிழார். பாதக மலங்களை நீக்கும் பாத கமலங்களைப் பற்றுக்கோடாக நாம் பற்றுதல் வேண்டும். திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில், வள்ளுவர் பத்து குறட்பாக்களில் ஏழு இடங்களில் மீண்டும் மீண்டும். இறைவனின் அடியையே குறிப்பிடுகிறார்.
``மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்’’
– என்பது திருவாசகம்.
‘விந்ததில் ஊறி வந்தது காயம்’ எனத் தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில்; ‘‘அருள் பாத மலர் தாராய்’’ என்பதையே ஆறுமுகப் பெருமானிடம் கோரிக்கையாகக் குறிப்பிடுகிறார்
அருணகிரிநாதர்.
“விந்ததின் ஊறி
வந்தது காயம்
வெந்தது கோடி இனிமேலோ
விண்டு விடாமல் உன்பத மேவு
விஞ்சையர் போல அடியேனும்
வந்து விநாச முன்கவி தீர
வண் சிவஞான வடிவாகி
வன்பத மேறி
என் களையாற
வந்தருள் பாதமலர் தாராய்!’’
இவ்வுடம்பை மீண்டும் மீண்டும் எடுப்பதும், அழியும்
அந்த உடம்பை அல்லும் பகலும் போற்றி வளர்ப்பதிலேயே
பொன்னான நேரத்தை மண்ணாக்கு
வதும் மனிதர்களின்
வேடிக்கையான வாடிக்கை
ஆகிவிட்டதே’’
– என்று வருத்தப்படுகிறார்கள் அருளாளர்கள்.
கடற்கரைக்குச் சென்ற ஒரு குழந்தை கைப்பிடி மணல் எடுத்து ‘ஒன்று இரண்டு மூன்று…’ என எண்ணினால் அந்த சின்னக் குழந்தையின் விளையாட்டு சீக்கிரத்தில் முடியுமா… என்ன.`
`சிதம்பரம் திருப்புகழில் எண்ணிலாப் பிறவிகள் எடுக்கும் நம்மை இப்படிப் பாடுகிறார் அருணகிரியார்.எழுகடல் மணலை அளவிடின் அதிகம்
எனது இடர் பிறவி அவதாரம்’’
– இதையே விரிவாக விளக்குகிறது திருவாசகத்தின் சிவபுராணம்!
“புல்லாகிப் பூடாய்ப்
புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள்
கண்டின்று வீடுற்றேன்.’’
என பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவன் அடிசேர்வதே என் லட்சியமாக இருக்க வேண்டும் என்றே அனைத்து அருளாளர்களும் பாடுகின்றனர்.
(அடுத்த இதழில்)
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்
The post திருப்பம் தரும் திருப்புகழ்-16 appeared first on Dinakaran.