வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் திடீரென மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு சன்மார்க்க அன்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கு வரும் 11-ம் தேதி தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. இதைக் காண தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கூடுவர். இதற்கான முன்னேற்பாடுளை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தெய்வநிலைய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சத்தியஞான சபை பெருவெளியைச் சுற்றிலும் பக்தர்கள் இளைப்பாற 100-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்நிலையில், 20-க்கும் மேற்பட்ட மரங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கடந்த 2 நாட்களாக தெய்வநிலைய நிர்வாகத்தினர் வெட்டி அகற்றி வருகின்றனர். இதற்கு சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என்ற பெயரில் பச்சை மரங்களை வெட்டுவது வேதனையளிப்பதாக சன்மார்க்க அன்பர்கள் தெரிவித்துள்ளனர்.