திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் புகார்கள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அலுவலர் ஷியாமளாராவ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் வசதிகள் திருப்திகரமாக இருப்பதை அனைவரும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வப்போது பக்தர்களிடமிருந்து தகவல்களை சேகரித்து, சர்வ தரிசனம் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கான வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு உணவு, பால் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்த விரிவான பகுப்பாய்வு அறிக்கையை தயாரிக்க வேண்டும். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகிக்கப்படும் கவுன்டர்களில் தாமதமின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்க கூடாது வகையில் ஏற்பாடுகளை செய்யவேண்டும். திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு கிடைக்கும் போக்குவரத்து வசதிகள் குறித்து பக்தர்களிடமிருந்து கருத்துகளை சேகரிக்க வேண்டும். திருமலையில் இரவு நேரங்களில் பக்தர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய இலவச பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். பக்தர்கள் அறைகளை எத்தனை மணி நேரத்தில் காலி செய்கிறார்கள், தொடர்ந்து மற்ற பக்தர்களுக்கு எத்தனை மணி நேரத்தில் அறைகள் ஒதுக்கப்படுகிறது என தகவல்களை பெறும் வகையில் ஒரு ‘செயலியை’ உருவாக்கவேண்டும். பக்தர்கள் தங்கள் லக்கேஜ் திருப்பதியில் டெபாசிட் செய்த பிறகு, அந்த லக்கேஜ் திருமலைக்கு சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு பக்தர்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
12 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 66,327 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,354 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.73 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 15 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது: அதிகாரிகளுக்கு தேவஸ்தானம் உத்தரவு appeared first on Dinakaran.