திருப்பதி பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

2 months ago 17

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இரவு பெரிய சேஷ வாகன வீதி உலா நடைபெற்றது.

விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை 5 தலைகளை கொண்ட சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. கலைஞர்களின் நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

வாகன வீதிஉலா முன்னால் தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் பல்வேறு ஆன்மிக புத்தகங்களை வெளியிட்டு, அந்த நூல்களின் ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'வீணை ஏந்திய சரஸ்வதி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன வீதிஉலா முன்னால் கலைஞர்களின் நாட்டிய, நடன, இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்தநிலையில், பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று காலை 8 மணியில் இருந்து சிம்ம வாகன மலையப்பசாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

விலங்குகளில் வலிமை மிக்கது சிங்கம். ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் விலங்குகளில் நான் சிம்மமாக இருப்பேன் என்பார். பாதி மனிதன், பாதி சிங்கம் உருவம் தான் நரசிம்மர் அவதாரம். இதை விளக்கும் வகையில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை 2-வது நாள் ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.

Read Entire Article