
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஒவ்வொரு தெலுங்கு ஆஷாட மாதத்திலும் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. அன்று காலை சுப்ரபாத சேவை, சத கலசாபிஷேகம், மகாசாந்தி ஹோமம் ஆகியவை நடந்தது. கோவில் கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜ சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் போன்றவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன்பிறகு சாமியின் கவசங்களுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு கவசாதி வாசம் நடந்தது. மாலையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கடைசி நாளான நேற்று கோவிந்தராஜ சாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காலை 8 மணி முதல் 11.30 மணி வரை வேத முழங்க சத கலச ஸ்நாபனம், மகாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், கவச பிரதிஷ்டை ஆகியவை நடைபெற்றன. 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கவச சமர்ப்பணம் நடைபெற்றது. தங்க கவசங்களுக்கு பூஜை செய்து உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் 5.30 மணி முதல் 6.30 மணி வரை உபய நாச்சியார்களுடன் கோவிந்தராஜ சுவாமி தங்க கவசத்துடன் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்வுகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான துணை அதிகாரி வி.ஆர்.சாந்தி, உதவி அதிகாரி முனிகிருஷ்ண ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.