
லண்டன்,
கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் பதவி விலகியபோது, அந்நாட்டின் பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்தது.
இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை கடந்தாண்டு ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்ற அவர் எம்.பி.யாக தொடர்கிறார்.
இந்த நிலையில், தொடக்க காலத்தில் பணிபுரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாச்சிஸ் (GOLDMAN SACHS ) நிதி நிறுவனத்தில் மீண்டும் ரிஷி சுனக் பணியில் சேர்ந்துள்ளார். முதுநிலை ஆலோசகர் பணியில் ரிஷி சுனக் இணைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார். 2000ம் ஆண்டு கோல்டுமேன் சாச்சிஸ் ல் தொடக்க நிலை பணியாளராக சேர்ந்து, அங்கு மொத்தமாக 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சீனியர் ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் இருந்து தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் அவர் 'தி ரிச்மண்ட் திட்டம்' என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.