
புதுச்சேரி,
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகாலை முதலே தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு சனீஸ்வர பகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடி, எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.