திருத்துறைப்பூண்டி, ஜன. 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய, நகரம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பருவம் தவறிப் பெய்த கனமழை மற்றும் காற்றால் சம்பா தாளடி நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்தது.
பாதிப்புக்குள்ளான பகுதிகளை முறையாக கணக்கெடுப்பு செய்து உடன் நிவாரணம் வழங்கக்கோரியும் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்து மூன்று மாதம் ஆகியும் ஊதியம் வழங்காததை கண்டித்தும் நகர்புறங்களிலும் 100 நாள் வேலையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கையில் வைத்துக் கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜோசப், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா, கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜவகர், நகர செயலாளர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திருத்துறைப்பூண்டியில் மழையால் பாதித்த பயிர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.