சென்னை: ஒன்றியத்தில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக் கடையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆவடியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பெரியார் மண்ணில் பெரும் வெற்றி பெற்றுள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை பேரும் டெபாசிட் இழந்துள்ளனர். ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன். மதவாதத்தை பயன்படுத்தி அரசியல் ரீதியாக லாபமடைய நினைக்கின்றனர். மதவாத அரசியல் மூலம் ஓட்டு அறுவடை செய்து காலத்தை ஓட்ட நினைக்கிறது பாஜக. ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு பட்ஜெட்டும் வெற்று அறிக்கையாக உள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே எதுவும் இல்லை. தமிழ்நாட்டை ஏமாற்ற நினைக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஒன்றிய பட்ஜெட் என்பது அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் உள்ளது. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கான அறிவிப்பு ஒன்றிய பட்ஜெட்டில் இல்லை. மக்கள் வளர்ச்சியில் ஒன்றிய பாஜக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. புதிய வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் இல்லை, உர மானியத்தை குறைத்துள்ளனர். ஒன்றிய பாஜக ஆட்சியில் மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பட்ஜெட்டில் ஆந்திரா ஆந்திரா என கூறினார்கள்; தற்போது பீகார், பீகார் என கூறுகின்றனர். தமிழ்நாட்டை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் இருப்பது ஏன்? எதற்கெடுத்தாலும் இல்லை இல்லை என்கிறார்கள்; இதற்கு பெயர் பட்ஜெட்டா?
மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் கடன் தருகிறோம் என்பதுதான் ஆட்சியா? நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது பெருமையா? அவர் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவது பெருமையா?. ஒன்றியத்தில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக் கடையா? இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? ஒன்றிய பாஜக அரசு நிதி தராமல் இருக்கலாம்; நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். ஆளுநர் ரவியே தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்தால்தான் நமக்கு வேகம் வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்ந்து இருக்க வேண்டும். இருவரும் சேர்ந்தே நமக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். வறுமை இல்லாத மாநிலமாக, பட்டினி சாவுகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் எல்லா சமய விழாக்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களைப் போல் மதவெறி மாநிலங்களாக இல்லாமல் அமைதிப்பூங்காவாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைப்பதன் மூலம் மாநில வளர்ச்சியை தடுப்பவர்களின் எண்ணம் ஈடேறாது. தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க நினைத்தால் ஏமாந்து போவீர்கள். திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள். தடைகளை கடந்து தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம். ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக 2026 தேர்தல் அமையும். 7வது முறையாக ஆட்சியமைத்து வெற்றி காண்போம் என்று கூறினார்.
The post ஒன்றியத்தில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக் கடையா?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.