திருத்தணி: திருத்தணி காவல் நிலையம் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்துபோன வாலிபரின் சடலத்தை இன்று காலை போலீசார் கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருத்தணி நகரில் உள்ள அரக்கோணம் சாலை, சுப்பிரமணியபுரம் ரயில்வே குடியிருப்பு தெருவை சேர்ந்தவர் சுதாகர் (41). இவர், திருமண மண்டபங்களில் பூ அலங்கார பணிகளில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர், இங்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை தனது மகனை பள்ளியில் விட்டு வருவதற்காக பைக்கில் சுதாகர் வெளியே சென்றுள்ளார் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள், குடும்பத்தினர் தேடியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, இன்று காலை இந்திரா நகரில் உள்ள திருத்தணி காவல் நிலையம் அருகே உள்ள கல்குவாரி பகுதியில் சுதாகரின் பைக் நின்றிருப்பதையும், குட்டைக்குள் மூழ்கிய நிலையில் சுதாகரின் சடலம் மிதப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்து கிடந்த சுதாகரின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அச்சடலத்தை திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்குவாரி குட்டைக்குள் மதுபோதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து கல்குவாரி குட்டைக்குள் வீசிவிட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post திருத்தணியில் கல்குவாரி குட்டையில் வாலிபர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.