போர் நிறுத்தம் தொடர்பாக ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் நாளை பேச்சுவார்த்தை: எல்லையோர மாநிலங்களில் அமைதி திரும்புகிறது

16 hours ago 4

புதுடெல்லி:போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்ட நிலையில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் போன்ற நீண்டகால பிரச்னைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டு கொன்றதற்கு பதிலடி கொடுக்க ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய விமானப்படை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசின.

இதனால் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இதை இந்தியா முறியடித்தது. காஷ்மீர் எல்லை பகுதிகளிலும் பொதுமக்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய போர் விமானங்கள் நேற்று பாகிஸ்தானில் ஊடுருவி 3 முக்கிய விமானப்படை தளங்கள், ஆயுத கிடங்குகள் உட்பட பாகிஸ்தான் 8 ராணுவ மையங்கள் மீது குண்டுகளை வீசின. இதில் பாகிஸ்தானுக்கு மிகப் பெரியளவில் சேதம் ஏற்பட்டது. இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை.

இதன்பின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே உடனடியாக சண்டை நிறுத்தம் செய்ய வலியுறுத்தியது. பணிந்து செல்ல பாகிஸ்தான் முன்வந்தது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் ஆகியவை நேற்று மாலை சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டன. ஆனால் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சு நடந்தது. அதற்கு பதிலடியும் இந்திய ராணுவம் தரப்பில் தரப்பட்டது.

இந்த போர் நிறுத்த மீறல்கள் நேற்றிரவு வரை நடந்த நிலையில் இன்று காலை வரை திட்டமிடப்பட்டுள்ளது; இரு நாடுகளின் ராணுவ தலைமை அதிகாரிகள் தொலைபேசி வழியாக பேசுவார்கள். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கும், எல்லையில் தாக்குதல்களை முற்றிலும் நிறுத்துவது, ட்ரோன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, இரு தரப்பு ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க பொதுவான ஒரு கட்டமைப்பை உருவாக்குவது போன்றவை குறித்து பேசப்படும். மேலும், காஷ்மீர் பிரச்னை, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் இடைநிறுத்தம் குறித்தும் பேசப்படலாம். ஏனெனில் பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தின் இடைநிறுத்தத்தை போர் நடவடிக்கையாக கருதுவதாக எச்சரித்துள்ளது. இரு நாடுகளும் இடையிலான பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால், மத்தியஸ்த குழு அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய சவாலாக இருப்பது, இரு நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையின்மை தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் தனது ராணுவம் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுவதாக கூறினாலும், இந்தியாவின் குற்றச்சாட்டுகள் மற்றும் எல்லையில் தொடரும் தாக்குதல்கள் பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கலாம். அமெரிக்கா, ஐ.நா., வளைகுடா நாடுகள் இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஈரான் மற்றும் சீனாவும் பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதாக கூறியுள்ளன. ஆனால் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல், இந்தியாவின் தற்காப்பு உரிமையை ஆதரித்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு எதிர்மறையாக அமைய வாய்ப்புள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நாளைய பேச்சுவார்த்தை, முக்கிய திருப்புமுனையாக அமையலாம். ஆனால் அதன் வெற்றி, இரு தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச அழுத்தங்களைப் பொறுத்தது. காஷ்மீர் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் போன்ற நீண்டகால பிரச்னைகள் இந்த கூட்டத்தில் முழுமையாக தீர்க்கப்படாவிட்டாலும், எல்லையில் பதற்றத்தைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

இருப்பினும், பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்த கடந்த 7ம் தேதி முதல் பதிலடி தாக்குதல்களை இந்திய ராணுவம் அரங்கேற்றிய நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் 90 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. இரு நாட்டின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. ஆனால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்களை நடத்தியது; இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு அரசியல் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு செயல்படுவதால், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவுகள் எதிர்பார்த்தப்படி இருக்காது என்றே கூறுகின்றனர். இந்த பேச்சுவார்த்தை அமைதியை நோக்கிய புதிய தொடக்கமாக இருக்குமா? அல்லது மற்றொரு தற்காலிக போர் நிறுத்தமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

The post போர் நிறுத்தம் தொடர்பாக ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் நாளை பேச்சுவார்த்தை: எல்லையோர மாநிலங்களில் அமைதி திரும்புகிறது appeared first on Dinakaran.

Read Entire Article