திருத்தணி: திருத்தணி நகராட்சிக்கு சொந்தமான நல்லான்குளத்தை சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருத்தணியில் அமிர்தபுரம் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான நல்லான்குளம் உள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவின்போது, காவடிகளுடன் வருகை தரும் பக்தர்கள் நல்லான்குளத்தில் நீராடி, காவடிகளுக்கு பூஜைகள் செய்து முருகன் கோயில் பின்புறம் படிக்கட்டுகள் வழியாக மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
மற்ற நாட்களில் அப்பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது போன்ற சடங்குகளுக்கு இந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் நல்லான்குளம் முழுமையாக நிரம்பி ரம்யமாக காட்சியளிக்கிறது. அதேநேரத்தில், முறையான பராமரிப்பின்றி குளத்தின் உள்பகுதியில் உள்ள படிகளில் செடிகொடிகள் அடர்த்தியாக வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள், பக்தர்கள் குளத்தில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதர் மண்டிய குளத்திலிருந்து பாம்பு, விஷப் பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் படையெடுத்து வருகின்றன. இதனால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இரவு நேரங்களில் குளத்தின் அருகில் சில சமூக விரோதிகள் மதுபானம் குடித்துவிட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர். எனவே திருத்தணி நகராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து இந்த குளத்தை சீரமைத்து, மலைக்கு பின்பக்கத்தில் உள்ள படிகளின் வழியை சீரமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post திருத்தணி அமிர்தபுரம் பகுதியில் புதர் மண்டி காணப்படும் நல்லான்குளம்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.