திருச்செந்தூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் பயணிகள், பக்தர்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி

2 months ago 12


திருச்செந்தூர்: திருச்செந்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்கின்றனர்.இங்கு ரயில் நிலையமும், பகத்சிங் பேருந்து நிலையமும் சுமார் 500 மீட்டர் இடைவெளியில் அருகருகே உள்ளது. திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாகவே ரயில் வழித்தடம் உள்ளது. சென்னையில் இருந்து நேரடியாக இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், கோவை, பெங்களூரு,மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலி வந்து அங்கிருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயிலில் வந்து செல்கின்றனர்.

இதனால் நாள்தோறும் இரவு 8.25 மணிக்கு சென்னைக்கும், பகல் 12.20 மணிக்கு பழநி வழியாக செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலும், திருநெல்வேலிக்கு காலை 7.10 மணி, 10.10 மணி, 2.50 மணி, மாலை 6.15 மணி ஆகிய நேரங்களில் பயணிகள் ரயில்களும் செல்கிறது. சென்னை மற்றும் நெல்லையில் இருந்து மறுமார்க்கமாகவும் திருச்செந்தூருக்கு ரயில் வருகிறது. இதனால் காலை முதல் இரவு வரை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுவட்டார விவசாயிகள், வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களின் பயணத்தேவையின் அங்கமாகவே திருச்செந்தூர் ரயில் நிலையம் உள்ளது. இதன் காரணமாகவே திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தில் ₹8.16 கோடி செலவில் வளர்ச்சி மற்றும் விரிவாக்கமாக நடைமேடை விரிவாக்கம், வாகன நிறுத்தம், பயணிகள் ஓய்வறை, மற்றும் காத்திருக்கும் அறை போன்ற பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இவையெல்லாம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை மாற்றிட உள்ளது.

ஆனால் ரயில் நிலையத்திற்கு வெளியே நடந்து வரும் பாதை முழுக்க முழுக்க வாகன நிறுத்தமாக மாறி வருவதாக பயணிகள் மற்றும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கி கூட்டம் கூட்டமாக ரயிலுக்கு வரும் பக்தர்கள் வழியில் நிற்கும் வாகனங்களால் சிரமமடைகின்றனர். மூத்த குடிமக்கள் மற்றும் இயலாதவர்கள் ஆட்டோ மற்றும் காரில் கூட செல்ல முடியாத அளவுக்கு வாகனங்கள் நிற்கின்றன. எனவே வழியில் வாகனங்கள் நிற்காமல் நடைபாதையை இடையூறு இல்லாமல் பயணிகள் செல்வதற்கு ரயில்ேவ நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருச்செந்தூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் பயணிகள், பக்தர்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article