‘‘தேனிக்காரர் அணியில் தொகுதி பிடிப்பதில் போட்டா போட்டியாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர், தற்போது இருந்தே தனக்கு அந்த ‘குறிப்பிட்ட தொகுதி’ வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்து வருகிறராம். இதை தேனிக்காராிடமும் அழுத்தமாக தெரிவித்து விட்டாராம். இதைப்போல், இலை கட்சியில் ‘மூன்று எழுத்தில் உள்ள முக்கிய நபரும்’, தனக்கு அந்த குறிப்பிட்ட தொகுதி வேண்டும் என அடம்பிடித்து வருகிறராம்.
இரண்டு பேரும் ஒரே கூட்டணியில் உள்ளார்கள். ஆனால், மேற்கண்ட இரண்டு பேரும் ஒரே தொகுதியை கேட்டு வருவது தற்போது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். யாருக்கு அந்த குறிப்பிட்ட தொகுதியை ஒதுக்குவது என்பது பெரும் சவலாக உள்ளதாம். தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், தொகுதியை பிடிக்க போட்டா போட்டி நிலவி வருகிறதாம். எந்த இடத்தில் இப்போ இருக்கிறோம் என தேனிக்காரரே எதுவும் தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார். இதில் தொகுதிக்கு போட்டாபோட்டி வேறயா.. என்று அவரது ஆதரவு கோஷ்டியினரே கிண்டலடித்து வருகின்றனாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பழைய ஆளால் மலராத கட்சி தலைவர் அப்செட்டில் இருப்பதாக ஒரே சேதி ஓடுதே.. என்ன விஷயமாம்…’’ என ஆவலோடு அடுத்த கேள்விக்கு தாவினார் மாமா. ‘‘மலராத கட்சியில் புதுசா தலைவரை நியமிச்சும் காக்கி அதிகாரிதான் பல மாவட்டங்களில் காலூன்றி நிற்கிறாராம் என்ற தகவல் அப்செட்டை ஏற்படுத்தியிருக்காம். மலராத கட்சியில் தமிழகத்தில் காக்கி அதிகாரியின் செயல்பாட்டில் எழுந்த அதிருப்தியால் அவரை தூக்கிட்டு இலை கட்சியிலிருந்து ஐக்கியமான நெல்லைக்காரரை நியமிச்சிருக்காங்களாம்.
ஆனால் புதுசா வந்த தலைவருக்கு பல மாவட்டங்களில் எழுச்சியும், ஆதரவும் இல்லையாம். இன்னமும் காக்கி அதிகாரி மறைமுகமாக தனது ஆதரவாளர்களை திரட்டி மாவட்டங்களில் மவுசு குறையாதபடி பார்த்து வருகிறாராம். புரம் என்று முடியும் மாவட்டத்தில் காக்கி அதிகாரி பெயரில் ஒரு தனி வாட்ஸ்அப் குழுவும் ஏற்படுத்தி ‘காக்கி பேன்ஸ்’ என்று செயல்பட்டு வருவதால் புதுசா நியமிக்கப்பட்ட தலைவர் அதிருப்தியில் இருக்கிறாராம். இங்குமட்டுமல்ல பல மாவட்டத்திலும் இதே நிலைதான் இருக்கிறதாம். பதவியில் தூக்கி விட்டாலும் பல மாவட்டங்களில் காக்கி அதிகாரி பண்ணும் திரைமறைவு வேலையால் புது தலைவரும், கூட்டணியில் சேர்ந்த இலை கட்சியும் அப்செட்டில்தான் இருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முறைகேடா குளங்களில் இருந்து மண் வெட்டி எடுக்கும் வேலை ஜரூரா நடந்திட்டிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ’’கடைக்கோடி மாவட்டத்தில் குளங்களை தூர்வாரும் நோக்கில், விவசாயிகள் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்து வயலில் கொட்டி, நிலத்தை பலமாக்கி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு போட்டுருக்கு. ஆனால் இதை பயன்படுத்தி ஒரு சில தனி நபர்கள், முறைகேடாக குளங்களில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து தங்களை பலப்படுத்தி வருகிறார்களாம். இதை கண்டும், காணாமல் இருக்க காக்கிகள், வருவாய்த்துறையை சேர்ந்த சிலருக்கு சம்திங்… சம்திங்.. வேறு மனம்போல் வாரி கொடுக்கிறார்களாம்.
மாவட்ட தலைநகரில் உள்ள செல்வத்தை வாரி வழங்கும் பெண் தெய்வத்தின் பெயர் கொண்ட குளத்தில் ஒருத்தர் பெயரில் அனுமதி வாங்கி 3 பேர் மாறி, மாறி மண் எடுத்து இப்போது 30 அடிக்கு மேல் தோண்டிட்டாங்களாம். ஆனாலும் இது பற்றி புகார் போனாலும் சம்பந்தப்பட்ட காக்கிகள், வருவாய்த்துறையினர் கண்டு கொள்வது இல்லையாம். தினமும் காலையில் தொடங்கி மாலை வரை மண் வெட்டும் பணி நடக்கிறதாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் பெரும்பாலான குளங்களில் இது போன்ற முறைகேடுகள் நடந்து வருகிறதாம். தூர்வாருதல் நிலத்தை பலப்படுத்திச்சோ இல்லையோ.. ஒரு சிலரின் பாக்கெட்டை பலப்படுத்தி இருக்கு.. என்று நொந்து போன விவசாயிகள் வேதனையுடன் கூறி வருகிறார்களாம் என்றார் விக்கியானந்தா.
‘‘ஆக்டரின் விசிறிகளை இழுக்க இலை பார்ட்டி திட்டம் போடுதாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘விசிறிகளாக இருந்து ஆக்டரின் நியூபார்ட்டியில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தூண்டில் போடும் ஒர்க்ைக இலைகட்சிகாரங்க தொடங்கி இருக்காங்களாம். இலையும், தாமரையும் அதிகாரப்பூர்வ கூட்டணி அமைச்ச சேதி, சமீபத்தில் வெளியாச்சு. ஆனால் இந்த அறிவிப்புக்கு போதிய ரெஸ்பான்ஸ் இல்லையாம். குறிப்பாக யூத்துகள் மத்தியில் இந்த கூட்டணி எந்த தாக்கத்ைதயும் ஏற்படுத்தவில்லை என்று மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்காங்களாம்.
இதில் கொடுமை என்னவென்றால் இலைகட்சி மூத்தநிர்வாகிகளின் வாரிசுகளான யூத்துகளே வேறு பார்ட்டிகளில் சேர்ந்துகிட்டு இருக்காங்களாம். இதனால் யூத்துகளை இலைபார்ட்டியில் இழுக்க என்ன செய்யலாம் என்பது இப்போது பெரும் யோசனையா இருக்காம். இதில் குறிப்பாக ஆக்டரின் பார்ட்டி நிர்வாகிகளை எப்படியாவது நம்மபக்கம் கொண்டு வரவேண்டும் என்பது மெயின் எய்மாக இருக்காம்.
இதுக்காக வடமாவட்டங்களில் உள்ள ஆக்டரின் பார்ட்டி நிர்வாகிகளுக்கு தொடர்ந்து வலைவீசிக்கிட்டு இருக்காங்களாம் இலைபார்ட்டிகள். முப்பது வருஷம் ஆண்ட பார்ட்டி, அனுபவமுள்ள பார்ட்டி. எங்க கூட சேர்ந்தால் உங்க லெவலே வேற என்று உருட்டுறாங்களாம். ஆனால் இவர்களின் உருட்டலுக்கு இதுவரை பயனில்லையாம். ஒரு நாலுபேரையாவது இழுத்தால் தான் நமக்கு கெத்து என்ற ரீதியில் தொடர்ந்து வசியம் பண்ணிகிட்டு இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
The post பழைய தலைவரின் மறைமுக தலையீட்டால் நொந்து போயிருக்கும் மலராத கட்சியின் புது தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.