ஜிம்பாப்வேயுடன் டெஸ்ட் போட்டி சதமடித்து கதகளி ஆடிய இங்கிலாந்தின் 3 வீரர்கள்

1 day ago 4

நாட்டிங்காம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் அதிரடியாக சதம் விளாசியதால், அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன் குவித்தது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இப்போட்டியின் முதல் நாளான நேற்று, டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, இங்கிலாந்தின் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

அதிரடியாக ஆடிய அவர்கள், ஒரு நாள் போட்டியை போன்று ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த இணையை பிரிக்க முடியாமல், ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் திணறினர். 41.3 ஓவர் முடிவில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 231 ஆக இருந்தபோது, மாதெவெரே பந்தில் முதல் விக்கெட்டாக, பென் டக்கெட், பென் கர்ரனிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.

அவர், 134 பந்துகளில் 2 சிக்சர், 20 பவுண்டரிகளுடன் 140 ரன் வெளுத்திருந்தார். அதன் பின் ஒல்லி போப் களமிறங்கினார். அவரும் சளைக்காமல் ரன்களை குவித்ததால் மளமளவென ஸ்கோர் உயர்ந்தது. இந்த இணை 137 ரன் சேர்த்திருந்தபோது, சிக்கந்தர் ராஸா பந்தில் கிராவ்லி எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். அவர், 171 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 124 ரன் குவித்திருந்தார். அதையடுத்து, ஜோ ரூட், ஒல்லி போப்புடன் இணை சேர்ந்தார். இவர்களும் சளைக்காமல் ரன் வேட்டையாடினர்.

இந்த இணை 111 ரன் குவித்திருந்தபோது, ஜோ ரூட், 34 ரன்னில் வீழ்ந்தார். பின்னர், ஹாரி புரூக், போப்புடன் இணை சேர்ந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி, 88 ஓவர்கள் ஆடி 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன் குவித்தது. ஒல்லி போப், 163 பந்துகளில் 169 ரன், ஹாரி புரூக் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்கிறது.

The post ஜிம்பாப்வேயுடன் டெஸ்ட் போட்டி சதமடித்து கதகளி ஆடிய இங்கிலாந்தின் 3 வீரர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article