திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ.3.62 கோடி: 1 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளியும் கிடைத்தது

3 months ago 14

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.3.62 கோடி மற்றும் 1 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி கடந்த அக்.24 மற்றும் 25ம் தேதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் வசந்த மண்டபத்தில் நடந்தது. கோயில் தக்கார் அருள் முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியை பார்வையிட்டார். இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் தங்கம், நாகவேல், கண்காணிப்பாளர் செந்தில்வேல்முருகன், ஆய்வர் செந்தில்நாயகி, தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் மோகன், கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர், தூத்துக்குடிஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழுவினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், 3 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 791 ரூபாயும், தங்கம் 1 கிலோ 55 கிராம், வெள்ளி 20 கிலோ 336 கிராம், பித்தளை 31 கிலோ 746 கிராம், செம்பு 3 கிலோ 12 கிராம், தகரம் 7 கிலோ 546 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 675ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ.3.62 கோடி: 1 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளியும் கிடைத்தது appeared first on Dinakaran.

Read Entire Article